`மருத்துவ கட்டமைப்பில் முன்னோடியாக தமிழகம்... ஆக்சிஜன் சம்பவம் உணர்த்தும் உண்மை!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மருத்துவ ஆக்சிஜன் தேவை உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு உத்தரவின்படி, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஐனாக்ஸ் ஆலை தான் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது. தமிழகத்தில் தேவைகள் இருப்பினும் அங்கே அனுப்பியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``தமிழகத்தில் உற்பத்தியாகும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிலிண்டரை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைத்த மத்திய அரசு, தமிழக அரசை கேட்காமல் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது இது குறித்து மத்திய அரசிடம் பேசுவோம்" என்றார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் சர்ச்சைகள் ஒருபுறமிருக்க, ``பல மாநிலங்கள் ஆக்சிஜனுக்காக தத்தளிக்கும் போது தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை எடுத்து அடுத்த மாநிலத்திற்கு கொடுக்கும் அளவில் தான் நிலைமை இருக்கிறது. தமிழக மக்களின் 50 ஆண்டு கால அரசியல் தேர்வு எப்போதும் தவறானதில்லை என்பதற்கு இதுவே ஒரு சான்று மருத்துவ கட்டமைப்பில் முன்னோடியாக திகழும் தமிழகம். எனவே வடமாநிலங்களுடன் தமிழகத்தை ஒப்பீடு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது” என தமிழ் ஆர்வலர்கள் பலர் சமூக வலைதளத்தில் இது தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர்..