2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை

சென்னையில் இரண்டாவது நாள் இரவு ஊரடங்கு காரணமாக மாநகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட்டது. ஆனாலும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதையடுத்து கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கை பிறப்பித்தது. இந்த இரவு நேர ஊரடங்கு செவ்வாய்கிழமை முதல் தமிழ்நாடு முழுவதும்அமலுக்கு வந்தது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய வாகனங்கள் செல்ல மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட்ட சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை இரவு 10 மணியுடன் நிறுத்தப்பட்டது. விரைவு ரயில்கள் வழக்கம்போல், இரவு நேரங்களில் இயக்கப்படுகிறது. இரவு நேரம் சாலைகளில் வாகனங்கள் இயங்காததால், மாநகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

2-வது நாளாக இரவு நேர ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக காணப்படும் பிரதான சாலைகள் வெறிச்சோடின. தலைநகர் சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, மவுண்ட் ரோடு, காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

More News >>