IPL கிரிக்கெட் தொடர் : கொல்கத்தாவை கதம் செய்தது சென்னை
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
14 வது IPL தொடரின் 2 வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 10 ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தனர்.
டு பிளிஸ்சிஸ் 35 வது பந்தில் அரைசதத்தை எட்டினார். தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல அடித்தளம் அமைத்துத் தந்ததால், டு பிளிஸ்சிஸ் மற்றும் அடுத்து களமிறங்கிய மொயீன் அலி அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தனர். இதனால், 16 வது ஓவரிலேயே சென்னை அணி 150 ரன்களைக் கடந்தது. மொயீன் அலி ஆட்டமிழக்க, டு பிளெஸ்ஸியுடன் கேப்டன் டோனி இணைந்தார். 19 வது ஓவரில் டு பிளெஸ்ஸி 3 பவுண்டரிகள் அடிக்க சென்னை அணி 200 ரன்களைத் தொட்டது. அதே ஓவரின் கடைசி பந்தில் டோனி 17 ரன்களில் வெளியேறினார்.
இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது.
221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது.
கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதற்கிடையில் பேட் கம்மின்ஸ் சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டார். 34 பந்துகளில் 4 பவுண்டரிகள், மற்றும் 6 சிக்சர்களை பறக்கவிட்ட அவர் 66 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மறுமுனையில் சரியான ஜோடி அமையாததால், கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.