இதை செய்யாவிட்டால் விவேக் ஆன்மா ஏற்காது - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி போடாமல் இருந்தால் விவேக் ஆன்மா ஏற்றுக் கொள்ளாது என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவின் 2வது அலை நாட்டையே உலுக்கி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரியில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. ஏழை மக்களுக்கு உதவும் வகையில் புதுச்சேரி அரசின் பாண்லே பால் விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் முகக்கவசம், கிருமிநாசினி விற்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்திருந்தார்.

அதன்படி, நேற்று இத்திட்டத்தை ஆளுநர் மாளிகையில் தமிழிசை தொடங்கி வைத்தார். பாண்லே நிறுவன மேலாண் இயக்குனர் சுதாகர் இதனை பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ``கொரோனாவை தடுக்க எளிய வழி முகக்கவசம் அணிவதும், கைகளை சுத்தமாக வைப்பதும்தான். மக்கள் பயன்பெற பாண்லே பாலகத்தில் தரமான முகக்கவசம் ஒரு ரூபாய்க்கும், 50 மில்லி கிருமிநாசினி ரூ.10க்கும் வழங்கப்படும் என்றார். புதுச்சேரியில் தடுப்பூசி போடுபவர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

ஆனால் நடிகர் விவேக் மரணத்திற்கு பிறகு பக்க விளைவு ஏற்படும் என்ற தவறான புரிதல், வதந்தியால் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மக்களிடம் அவநம்பிக்கையை போக்க வேண்டும். நடிகர் விவேக் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊசி போட்டு கொண்டார். ஆனால் அவரது மரணத்தை எண்ணி பயந்து ஊசி போடாமல் இருப்பதை அவரது ஆன்மா ஏற்காது. மக்களின் பாதுகாப்பு கருதி முகக்கவசம் மற்றும் தடுப்பூசிகளை போடுவதற்கு தூதுவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும்” என தமிழிசை தெரிவித்தார்.

More News >>