பிச்சை எடுங்க திருடுங்க இல்ல கடன் வாங்குங்க.. ஆனால் ஆக்சிஜன் கொடுங்க.. நீதிபதிகள் விமர்சனம்!
கொரோனா 2ம் அலை நாடு முழுவதும் கவலைகளை அதிகரித்துள்ளது. மேலும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது மத்திய அரசு. குஜராத் முழுவதும் பல்வேறு நகரங்களில் மருத்துவமனை வசதிகள், ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டிசிவிர் பற்றாக்குறை நிலவி வருகிறது. நிலைமை சீரடைய அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
இந்த இரண்டு மாநிலங்களில் மட்டுமல்ல, பல மாநிலங்களிலும் இதே நிலை தான். இதற்கிடையே ஆக்ஸிஜன் தட்டுப்பாடு வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினர்.
இந்த மனுவை விசாரித்த போதே டெல்லியை சேர்ந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம், ``மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு போதிய ஆக்சிஜன் இல்லாத சூழல் இருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் தங்களுக்கான ஆக்சிஜனை உடனடியாக வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தது. இதை உடனடி வழக்காக பதிவு செய்தது விசாரித்த நீதிபதிகள், ``அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று,
நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருவது. அதனை அரசாங்கம் சரியாக செய்ய வேண்டும். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால், மருத்துவ ஆக்சிஜன் சப்ளையை செய்யுங்கள்" என்று கூறியுள்ளனர்.