மேற்குவங்கத்தில் 6 ஆம் கட்ட தேர்தல் : சூடுபிடித்த வாக்குப்பதிவு
மேற்குவங்கத்தில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையைற்றி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ள நிலையில், 6 ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 6 ஆம் கட்டத் தோ்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.
43 தொகுதிகளுக்கு நடைபெறும் வாக்குப்பதிவிற்காக 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 53.21 லட்சம் ஆண் வாக்காளா்கள், 50.65 லட்சம் பெண் வாக்காளா்கள் என மொத்தம் 1.03 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.
இந்த தேர்தலில் பாஜக தேசிய துணைத் தலைவா் முகுல் ராய், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்களும், மாநில அமைச்சா்களுமான ஜோதிபிரியா மாலிக், சந்திரிமா பட்டாச்சார்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தன்மே பட்டாச்சார்யா, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் திரைப்பட இயக்குநா் ராஜ் சக்கரவா்த்தி, நடிகை கெளஷானி முகா்ஜி ஆகியோர் உள்பட மொத்தம் 306 வாக்காளா்கள் களத்தில் உள்ளனா்.
கடந்த 3 மற்றும் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவில் பெரியளவில் வன்முறை ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது, எவ்வித வன்முறை சம்பவங்களும் நடைபெறாமல் இருக்கவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக 1,071 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து வரும் 26, 29 ஆகிய தேதிகளில் மீதமுள்ள இரண்டு கட்டத் தோ்தல்கள் நடைபெற உள்ளன.