ஜார்ஜ் பிளாய்ட் போல் மீண்டும் இனவெறி கொலை.. பலியான 16 வயது சிறுமி!
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு, கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் தனது கால் முட்டியை வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறி அவர் உயிரிழந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர்கின் மனதை பதைபதைக்க வைத்தது. போலீஸ் அதிகாரிக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 போலீசார் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டெரிக் சாவின் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.
அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த தீர்ப்பை ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இதற்கிடையே, நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் நேற்று மேலும் ஒரு கறுப்பின சிறுமி வெள்ளையின போலீஸ் ஒருவரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதே அமெரிக்காவில் தான் இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. 16 வயதே ஆன கறுப்பின சிறுமி மகியா பிரையன்ட் என்பவர் தான் அவர். இதையடுத்து சிறுமியின் கொலை, இனவெறியின் காரணமாகவே நிகழ்ந்தது எனக் கூறி, 'Say her name: Ma'Khia Bryant' என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். `she was 16' என்று பதாகைகளை ஏந்தி கொண்டு இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்த தொடங்கியிருக்கின்றனர். இதனால், மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.