அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி.. தமிழக அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பெரும் உச்சத்தை தொட்டு வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பானது உயர்ந்துகொண்டேதான் இருக்கிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதனால் உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. காரணம், கொரோனா இரண்டாம் அலையில் இளம் வயதினரே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசின் தடுப்பூசி கட்டுப்பாடு தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வந்தது.
இதற்கிடையே, சமீபத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இது தற்போது நடைமுறைக்கு வராது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தநிலையில் தமிழக அரசு இன்று, தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம்கள் மே 1 முதல் நடத்தப்படும் என்றும், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தாமாக வரும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஏற்கனவே அனைவருக்கும் இலவச தடுப்பூசி அறிவிப்பை, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.