தமிழகத்தில் 13000, கேரளாவில் 27000.. அச்சம் தரும் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் இன்று 1,15,653 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இன்று மட்டும் 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதுவும் சென்னையில் நேற்று 3750 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று மட்டும் 3,789 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று, கொரோனா காரணமாக மேலும் 59 பேர் இறந்த நிலையில் உயிரிழந்த சோகமும் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் இந்த நிலை என்றால், நமது அண்டை மாநிலமான கேரளாவில் இதைவிட அதிகம். கேரளாவில் ஒரே நாளில் மேலும் 26,995 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் இருந்ததை விட தற்போது 27 ஆயிரத்தை தொட்டிருக்கும் பாதிப்பு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், அம்மாநிலத்தில் கொரோனா மொத்த பாதிப்பு பதிமூன்று லட்சத்தை கடந்திருக்கிறது. இதுவரை மொத்தம் 13,22,054 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று மட்டும் அங்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர்.