IPL தொடர்: 10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
14 வது IPL கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பட்லர், வோரா ஆகியோர் களமிறங்கினர். ஆனால் இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். கேப்டன் சஞ்சு சாம்சன் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய துபே 32 பந்துகளுக்கு 46 ரன்கள் எடுத்தார். அரைசதத்தை பதிவு செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 46 ரன்களில் கேட்ச் அவுட் ஆனார்.
கடைசியில் ஜோடி சேர்ந்த ராகுல் தெவாட்டியா, கிறிஸ் மோரிஸ் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் 177 ரன்கள் குவித்தது.
178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த படிக்கல், 8 வது ஓவரில் அரைசதத்தைக் கடந்தார். விராட் கோலி 13 வது ஓவரில் அரைசதத்தை கடந்தார்.
தேவ்தத் படிக்கல் 17 வது ஓவரில் பந்தை பவுண்டரிக்கு தட்டி விட்டு 100 ரன்களைக் கடந்தார். இறுதியாக 16.3 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பு எதுவும் இன்றி 181 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் மூலம் IPL தொடரில் 6000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.