“மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்குதான்” – ரைசாவிற்கு மருத்துவர் கெடு

சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக, நடிகை ரைசா வில்சன் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டுமென மருத்துவர் பைரவி செந்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

விளம்பரத் துறையில் மாடலாக இருந்து, பின் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். அதன் பிறகு, “பியார் பிரேமா காதல்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படம் வெற்றியடைந்ததால், அடுத்தடுத்த வாய்ப்புகளும் ரைசாவிற்கு கிடைத்தன. அந்த வகையில், காதலிக்க யாருமில்லை, தி சேஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மாடலிங் துறையிலும் பிசியாக வலம் வரும் ரைசா, தன் அழகை பராமரிப்பதிலும் மிகவும் கவனமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தோல் பரமாரிப்பு மருத்துவமனையில், முகப்பொலிவு செய்வதற்காக சென்றிருக்கிறார் ரைசா. அங்கு, மருத்துவர் பைரவி செந்திலிடம், 62 ஆயிரத்து 500 ரூபாய் செலவு செய்து முகப்பொலிவு செய்ததாகவும், அவர் தனக்கு வேண்டாத சில சிகிச்சைகளை அளித்ததால், முகம் வீங்கியிருப்பதாகவும் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும், மருத்துவர் பைரவி தன்னிடம் பேச மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், மருத்துவர் பைரவி செந்திலிடம் ஒரு கோடியே 27 ஆயிரத்து 500 ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ரைசா, தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன்னுடைய உதவி மருத்துவர் மூலம் மேல் சிகிச்சை செய்த பத்து நாட்களுக்கு பிறகும் முகவீக்கத்தில் இருந்து எந்த முன்னேற்றம் இல்லை எனக் கூறியுள்ள ரைசா, 15 நாட்களுக்குள் இழப்பீடு வழங்காவிட்டால், நீதிமன்றத்தில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என்றும் ரைசா எச்சரித்துள்ளார்.

ரைசாவுக்கு ஏற்பட்டது பயப்படக்கூடிய விளைவுகள் இல்லை என்றும், இயற்கையாகவே குணமடையக்கூடிய ஒன்றுதான் என்றும் மருத்துவர் பைரவி செந்தில் கூறியுள்ளார். தனது நற்பெயரை கெடுக்கும் விதமாக ரைசா நாடகமாடுவதாகவும், 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் பைரவி செந்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மன்னிப்பு கேட்காவிட்டால், மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

More News >>