மே-2க்கு பிறகு ஊரடங்கு? – என்ன சொல்கிறார் ஸ்டாலின்?
தமிழகத்தில் மே 2-ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பிருக்காது என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை புரடிடப்போட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரேனாவால் நாள் ஒன்றுக்கு 12000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா உயிரிழப்பு தினமும் 50 என்ற நிலையில் உள்ளது. மேலும் ஊரடங்கினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தொழிலாளர்கள், அன்றாடம் காய்ச்சிகள் என பலர் வேதனை தெரிவித்துள்ளனர். இது அவர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
இந்நிலையில் மே 2-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் முழு ஊரடங்கு வாய்ப்பிருக்காது என்று ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ``கொரோனா 2.0 எனப்படும் இந்த இரண்டாவது அலையின் உயிர்ப்பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதில் நம் கழகத்தைச் சேர்ந்தவர்களும் மரணமடைகிற வேதனைச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
தன் உயிர் போலப் பிற உயிர்களை நேசிப்பதும் - பிற உயிர்களைப் போலத் தன்னுயிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதும் இந்தப் பேரிடர்ச் சூழலில் இன்றியமையாததாகும். அதனை உணர்ந்து கழகத்தினர் கவனத்துடன் கடமையாற்ற வேண்டும். முதல் அலை தாக்கத்தின்போது, நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
எனினும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், உளவியல் சிக்கல்கள், தனிநபர் பாதிப்புகள் இவற்றிலிருந்து இன்றுவரை முழுமையாக மீள முடியவில்லை. தொழில் வாய்ப்புகளை இழந்தோர், வேலையினைப் பறிகொடுத்தோர் இப்போதும் மன உளைச்சலில் தவிக்கின்றனர். அதனால், இந்த இரண்டாவது அலைத் தாக்கத்தின்போது குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் கழகத்தினரும் அவற்றுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
மே 2-க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கொரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்க பலமாக நிற்போம் என்று தெரிவித்துள்ளார்.