தாய்க்கு ஆக்ஸிஜன் கேட்ட நபர் - கன்னத்தில் அறைவேன் என கூறிய பாஜக மத்திய அமைச்சர்!
மத்தியப் பிரதேசத்தில் தன் தாயின் உயிரைக் காப்பாற்ற ஆக்சிஜன் கேட்டுக் கதறியவரை நோக்கி, கன்னத்தில் இரண்டு அறை விடுவேன் என்று பாஜக மத்திய அமைச்சர் கூறியது கடும் சர்ச்சைகளையும் கொந்தளிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தாமோ லோக்சபா தொகுதியைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.பி., பிரஹலாத் படேல். இவர், மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
கொரோனா தொற்று பரவல் மிகக் கடுமையாக உள்ள, 10 மாநிலங்களில், மத்திய பிரதேசம் இடம் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும், மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தாமோ மாவட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள, ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கும் அறைக்குள், சமீபத்தில் புகுந்த நோயாளிகளின் உறவினர்கள், சிலிண்டர்களை திருடிச் சென்றனர்.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பிரஹலாத் படேல், தமோ மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்தார். அப்போது, அமைச்சரை அணுகிய சிலர், தங்கள் உறவினர்களுக்கு ஆக்சிஜன் சிலண்டர் அளித்து உதவும்படி கோரிக்கை விடுத்தனர்.கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், தன் தாய், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு ஆக்சிஜன் வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பதாகவும் தெரிவித்தார்.தயவு செய்து தன் தாயின் உயிரை காப்பாற்றும்படி, அமைச்சர் முன், கண்ணீர்விட்டு கதறினர்.இதனால் எரிச்சல் அடைந்த அமைச்சர் பிரஹலாத் படேல், ''இப்படியே பேசிக் கொண்டிருந்தால், கன்னத்தில் இரண்டு அறை விடுவேன்,'' என கூறினார. அமைச்சரின் இந்த பேச்சு, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.