இந்தியாவுக்கு உதவ நாங்கள் தயார் – கைகொடுக்கும் உலக நாடுகள்!
இந்தியாவுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சீனா, மற்றும் பிரான்ஸ் நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒருநாளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு 3.30 லட்சத்தை தாண்டியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. எனினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வர மறுக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்த படியாக கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் இதுவரை 1.6 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில், பிரன்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு உதவ தயாராக இருப்பதாக கூறியதாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனைன் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- கொரோனாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பிரான்சு உங்களுடன் இருக்கிறது. எங்களின் ஆதரவை அளிக்க தயாராக இருக்கிறோம்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கொரோனா பெருந்தொற்று ஒட்டு மொத்த மனித இனத்திற்கே பொதுவான எதிரியாக உருவெடுத்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக போராட சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்.
இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது எங்களுக்குத் தெரியும். இந்தியாவில் கொரோனா தடுப்பு மற்றும் மருந்து பொருட்களுக்கு தற்காலிகமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவுக்கு தேவையான ஆதரவையும், உதவிகளையும் வழங்க சீனா தயாராக உள்ளது. இது கொரோனாவை கட்டுப்படுத்த அவர்களுக்கு உதவும்என்று தெரிவித்துள்ளார்.