“அடிக்கடி டிவியில் தோன்றி பேசினால் கொரோனா ஓடிவிடாது” – பிரதமர் மோடிக்கு கண்டனம்

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் கொத்து கொத்தாக கொரோனா நோயாளிகள் உயிரிழக்கின்றனர். ஒருபக்கம் வைரஸ் தாக்கத்தாலும், மறுபக்கம் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவும் செத்து மடிகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று அதிகம் பாதித்த 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது, டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை வேண்டுமென இந்த கூட்டத்தில், பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தன. அப்போது பேசிய பிரதமர் மோடி, ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத நிலை விரைவில் உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி கூட்டிய ஆலோசனை கூட்டம் குறித்து, கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.

அவர், தனது ட்விட்டர் பக்கத்தில்,

பிரதமர் மோடி அடிக்கடி மக்களுக்கு முகத்தை காட்டுகிறார். இவ்வாறு முகத்தை காட்டுவதால் கொரோனா ஓடி போகாது. நீங்கள் அடிக்கடி முதலமைச்சர் கூட்டத்தை நடத்துகிறீர்கள். இவ்வாறு கூட்டங்களை நடத்தி பாடம் நடத்த நீங்கள் என்ன தலைமை ஆசிரியரா? முதலில் மாநிலங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக்சிஜனை வழங்குங்கள் என்று கேட்டால், சட்டவிரோதமாக மருந்துகளை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் சொல்கிறார். நீங்கள் என்ன மாநிலங்களின் அனுமதி பெற்று ஆக்சிஜனை ஏற்றுமதி செய்தீர்களா?

பெங்களூருவில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான நோயாளிகள் ஆஸ்பத்திரிகள் முன்பு நிற்கிறார்கள். அவர்களின் கதி என்ன. கொரோனா பரவல், கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டதாக எடியூரப்பா கூறியுள்ளார். கொரோனாவை நிர்வகிக்க முடியாத முதலமைச்சரை வைத்துக்கொண்டு வைரஸ் பரவலை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பிரதமர் மோடி பதில் கூற வேண்டும்.” என அவர் பதிவிட்டுள்ளார்.

More News >>