தன்னை தானே இறந்துவிட்டதாக கூறி ஸ்டேடஸ் அதிர்ச்சியில் உறவினர்கள் - கடுப்பான பெற்றோர்!
சங்கரன்கோவிலை சேர்ந்த மகாபிரபு என்ற இளைஞர், தனது வாட்ஸ் அப்பில் என்ன ஸ்டேட்டஸ் வைப்பது என்று தெரியாமல், தான் இறந்துவிட்டதாக கூறி, வால்போஸ்டர் அடித்து ஓட்டி, அதனை ஸ்டேட்டஸாக வைத்து நண்பர்கள், உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
ஸ்டேடஸ், செல்ஃபி மோகங்கள் இளைஞர்களை பைத்தியமாக ஆக்கி விடுகின்றன. தங்களுடைய உணர்ச்சிகள் அனைத்தையும் ஸ்டேடஸ் வைக்கும் போக்குகள் தற்போது அதிகரித்து வருகின்றன. என்ன நடந்தாலும் ஸ்டேடஸ், காதல் தோல்வி முதல் கரண்டு கட் ஆனது வரை ஸ்டேடஸ் மூலமாகவே எல்லாத்தையும் தெரிவித்து விடுகிறார்கள்.
அப்படியான ஸ்டேடஸ் பித்து தான் தற்போது ஒருவரை எக்ஸ்ட்ரீம் வரை கொண்டு சென்றுள்ளது. இளைஞர் ஒருவர் விநோதமான முறையில் வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் வைத்து நண்பர்களை வியப்பில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ஆவுடையாபுரம் பகுதியை சேர்ந்த கனிமாரியப்பன் மகன் மகாபிரபு (25). இவர் திருவேங்கடம் பகுதியில் லோடு ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். தனது வேலை நேரம் போக மற்ற நேரங்களில் செல்போனுடனே தனது நேரத்தை செலவிட்டு வந்துள்ளார்.
குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ்அப்பில் பாடல்கள், காமெடிகள் என ஸ்டேட்டஸ் வைத்து கொண்டு வந்துள்ளார். எப்போதும் வாட்ஸ்அப்பில் மூழ்கி இருக்கும் இவருக்கு ஒரு ஸ்டேடஸ்களில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தான் வைத்த ஸ்டேட்டஸ் தனக்கே பிடிக்காமல் போக விநோதமான முறையில் ஸ்டேட்டஸ் வைக்க முயற்சி செய்துள்ளார். அதன்படி, வாட்ஸ் ஆப்பில் தான் இறந்து விட்டதாக கூறி ஸ்டேட்டஸ் வைத்து உள்ளார்.
இவர் வைத்த ஸ்டேட்டசை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், உறவினர்கள் உடனடியாக அவரது எண்ணை தொடர்பு கொண்டபோது, தான் உயிரோடு இருப்பதாகவும் தான் இறந்தாக ஸ்டேட்டஸ் வைத்தால் என்ன ரெஸ்பான்ஸ் வருகிறது என்று பார்த்தேன் என்று சிரித்து கொண்டே கூறியுள்ளார். இதனை கேட்ட அவரது நண்பர்கள், உறவினர்கள் சரமாரி வசை பாடியுள்ளனர். பெற்றோர் அடித்து எச்சரித்துள்ளனர்.