2 மணி நேரத்தில் 25 பேர் பலி… 60 பேரின் உயிர் ஊசல்…
டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, இரண்டே மணிநேரத்தில் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக பரவி வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மேக்ஸ் மருத்துவமனை மற்றும் சரோஜ் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை நிர்வாகங்கள் ஏற்கெனவே நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன.
டெல்லியிலுள்ள கங்கா ராம் மருத்துவமனையில் மட்டும் 500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூச்சுத்திணறல் அதிகம் உள்ள 140-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் குழாய் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2 மணி நேரத்திற்கு போதுமான ஆக்சிஜன் மட்டுமே இருப்பில் உள்ளதாகவும், ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகளை காக்க ஆக்சிஜனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவமனை நிர்வாகம் அவசர வேண்டுகோள் விடுத்தது.
60க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு விமானம் மூலமாவது உடனடியாக ஆக்சிஜன் கொண்டுவரப்பட வேண்டும் என மருத்துவமனை இயக்குநர் கூறினார். எனினும், டெல்லி அரசால், 2 மணி நேரத்திற்குள் ஆக்சிஜன் கொண்டுவர முடியாததால், 25 நோயாளிகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியபோது, டெல்லிக்கு போதிய ஆக்சிஜன் வழங்காமல் மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, டெல்லிக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாக விளக்கமளித்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அரசியல் செய்ய பார்ப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மத்திய அரசு குற்றம்சாட்டியது.
இந்நிலையில் விமானங்கள் மற்றும் ரயில்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் எடுத்துச்செல்லும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக டெல்லி மேக்ஸ் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துச் செல்லப்பட்டது. இதே போல, ஒடிசா மாநிலம் அங்குல் பகுதியில் உள்ள ஆலைகளில் இருந்து 20 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் நிரப்பிய டேங்கர் லாரிகள் விசாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.