நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பவுலிங் அஸ்திரம் யார் என்றால் அது இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் கிரிக்கெட் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தான். இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து அவர் விலகியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சீசனில் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. இந்நிலையில், நடப்பு சீசனிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடாத அவர், எஞ்சிய போட்டிகள் உட்பட நடப்பு சீசனிலிருந்தே விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்து அவதிப்பட்டு வந்தார் ஆர்ச்சர். கையில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர் சமீபத்தில் பயிற்சியை தொடங்கினார்.
இதனால் அவர் ஐ.பி.எல். போட்டியில் கடைசி கட்டத்தில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.இதற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸும் ராஜஸ்தான் அணியிலிருந்து காயத்தினால் விலகியிருந்தார். தற்போது ஆர்ச்சரும் விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சுஸ்செஸ் அணியினருடன் இணைந்து ஜோப்ரா ஆர்ச்சர் அடுத்த வாரம் பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும், அவர் பிரச்சினையின்றி தொடர்ந்து பந்து வீசினால் 2 வாரத்துக்கு பிறகு களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் எந்த ஆட்டத்தில் விளையாடுவார் என்பதை பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.