305 சவரன் நகைகள் கையாடல் - நிதி நிறுவன ஊழியர்கள் மோசடி அம்பலம்
புதுக்கோட்டையில் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை ஊழியர்களே கையாடல் செய்தது உறுதியானதை அடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை தெற்கு ரத வீதியில், கடந்த 5 ஆண்டுகளாக இயங்கிவரும் தனியார் நிதி நிறுவன கிளை, பொதுமக்களுக்கு தனிநபர் கடன், வீட்டு கடன், நகைக் கடன் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த ஓராண்டில் நடைபெற்ற பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து 2 நாட்களுக்கு முன்பு, கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்நிறுவனத்தின் திருச்சி மண்டல மேலாளர் ராஜேஸ் தலைமையிலான குழு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டது. அப்போது, கடந்த ஓராண்டில் மட்டும், 91 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, சுமார் 305 பவுன் தங்க நகைகள் கையாடல் செய்யப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக நிறுவனத்தின் மண்டல மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், நகை மதிப்பீட்டாளர் சோலைமணி, தனி நபர் கடன் பிரிவில் பணியாற்றி வந்த முத்துக்குமார், கிளை மேலாளர் உமாசங்கர் ஆகியோரை கணேஷ் நகர் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஊழியர்கள் மூன்று பேரும் சேர்ந்து மோசடி செய்திருப்பது உறுதியானது. மேலும், கையாடல் செய்த நகைகளை மற்றொரு தனியார் நிறுவனத்தில் அவர்கள் அடகு வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த நகைகளை காவல்துறையினர் மீட்டனர்.