இ-பாஸ் கட்டாயம்.. தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?!

தமிழகத்தில் கொரோனா முதல் அலையைக் காட்டிலும், இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியது. இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இருப்பினும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக வெளிநாடுகள்,வெளி மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் உள்பட, தமிழகம் முழுவதும் புதிதாக 13 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 8 ஆயிரத்து 432 பேர் ஆண்களும், 5 ஆயிரத்து 344 பேர் பெண்களும் ஆவர். சென்னையில் 3 ஆயிரத்து 842 பேரும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 934 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகளுடன் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் இன்று தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம். சென்னை உள்பட மாநகராட்சிகளில், நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை.

தமிழகத்தில் ஏப்.26ஆம் தேதி முதல் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதியில்லை. சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நாளை முதல் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. விடுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்கவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

More News >>