காற்று மாசுவைத் தாண்டி மாஸ் காட்டிய கேப்டன் விராட் கோலி!
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இந்திய- இலங்கை அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று மதிய இடைவேளைக்குப் பிறகு, காற்று மாசு காரணமாக பந்து தெரியவில்லை. இதையடுத்து, 20 நிமிடங்கள் போட்டி நிறுத்தப்பட்டது. காற்று மாசு காரணமாக சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் போட்டி நிறுப்படுவது இதுவே முதன்முறை.
இலங்கை அணி வீரர்கள் மூக்கை மூடி முகமூடி அணிந்து கொண்டனர். 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் போட்டி தொடங்கியது. ஆனால், 5 நிமிடங்களில் மீண்டும் நிறுத்தப்பட்டது. நான்கு இலங்கை வீரர்கள் வாந்தி எடுத்தாகவும் சொல்லப்படுகிறது. இலங்கை வீரர்கள் சிலர் மூச்சு விட சிரமப்பபட்டதாக தெரிவித்துள்ளனர்.
மைதானத்தில் போட்டியை காண 20 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர்களில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்திய வீரர்களும் பாதிக்கப்படவில்லை. இந்திய அணி, முதல் இன்னிங்சில் 576 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி 243 ரன்கள் அடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
விராட் கோலி அபார சாதனை!
இந்த போட்டியில், இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் 6வது இரட்டை சதமடித்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக முறை இரட்டை சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில், சேவக், சச்சினுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். தவிர, அதிக இரட்டை சதமடித்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் கோலி. அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீசின் லாரா (5 இரட்டை சதம்) உள்ளார். இதில், இன்னொரு சிறப்பு என்னவென்றால், 2016ம் ஆண்டு வரை விராட் கோலி இரட்டை சதம் அடித்ததில்லை. கடந்த ஒரு வருடத்தில்தான் 6 இரட்டை சதங்களை அவர் விளாசியுள்ளார்.
தொடர்ச்சியாக அடுத்தடுத்த இரு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதமடித்த 6வது வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். நாக்பூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியிலும் கோலி, 213 ரன்கள் அடித்திருந்தார். டெல்லி போட்டியிலும் 243 ரன்களை விராட் குவித்தார். இதனால், அடுத்தடுத்த போட்டியில் இரட்டை சதமடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையும் கோலி பெற்றுள்ளார். முன்னதாக வினோத் காம்ப்ளி 1993ம் ஆண்டு 224, 227 ரன்கள் அடித்துள்ளார்.
1928, 1933ம் ஆண்டுகளில் இங்கிலாந்து வீரர் ஹாமன்ட் தொடர்ச்சியாக இரு முறை இரட்டை சதமடித்துள்ளார். பிராட்மேன், 1934ம் ஆண்டு 304, 244 அடித்துள்ளார். 2000ம் ஆண்டு சங்ககாரா 200,222 ரன்களும் 2012ம் ஆண்டு மைக்கேல் கிளார்க் 259, 230 ரன்கள் எடுத்துள்ளார்.