அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்!.. இனியாவது குறையுமா கொரோனா?!

தமிழ்நாடு அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதன்படி, அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள், அனைத்து மதக் கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், இயங்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்படவில்லை. மளிகை, காய்கறிக்கடைகள் மற்றும் இதர அத்தியாவசிய கடைகள் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

எனினும் வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியாக செயல்படுகின்ற மளிகை உள்ளிட்ட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள், குளிர்சாதன வசதி இன்றி இயங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் அமர்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும் என்றும், விடுதி உணவு கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் வணிக சேவைகள் வரையறுக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டிற்குள் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமான பூஜைகளுக்கு எவ்வித தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடமுழுக்கு மற்றும் திருவிழாக்களை 50 நபர்களுடன் நடத்தலாம் என்ற முந்தைய அனுமதி ரத்து செய்யப்பட்டு, பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளை 50 பேருக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களை 25 பேருக்கு மிகாமலும் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐ.டி. நிறுவனங்களில் குறைந்தபட்சமாக 50 சதவிகித ஊழியர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணியாற்ற வேண்டுமென்றும், கோல்ஃப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி தவிர்த்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள், இ-பதிவு விபரங்களை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர் என கூறியுள்ள தமிழ்நாடு அரசு, வெளிநாடுகளில் இருந்து கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு வருவோருக்கும் இ-பதிவு கட்டாயம் என தெரிவித்துள்ளது.

More News >>