தடுப்பூசி குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்
தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளுக்கு பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி, மான் கீ பாத் என்ற வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடன் கலந்துரையாடுகிறார். அவ்வகையில் ஏப்ரல் மாதத்திற்கான மான் கீ பாத் வானொலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது:- நமது பொறுமையையும் வலியை தாங்கும் திறனையும் கொரோனா சோதிக்கும் இந்த நேரத்தில், நமது அன்புக்குரியவர்களில் பலர் நம்மை விட்டு சென்று விட்டனர். கொரோனா வைரசின் முதலாவது அலையை வெற்றிகரமாக சமாளித்த பின்னர், நாட்டின் மன உறுதியும் அதிகமாக இருந்தது. ஆனால், இந்த புயல் நாட்டையே உலுக்கியுள்ளது. கொரோனாவின் இந்த அலையைச் சமாளிக்க, மருந்தியல் தொழில், ஆக்சிஜன் உற்பத்தி போன்ற பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளேன்.
நமது சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடுகின்றனர். கடந்த ஓராண்டு காலமாக, இந்த தொற்றுநோயை சமாளிப்பது தொடர்பாக அவர்கள் பலவிதமான அனுபவங்களை பெற்றுள்ளனர். தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம். மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் இலவசமாக தடுப்பூசி அனுப்பியுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும் இதன் மூலம் பயனடையலாம். மே 1-ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி கிடைக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.