“தடுப்பூசி மையங்களுக்கு செல்லும்போது கட்டாயம் இதை பின்பற்றுங்கள்”
இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் என இரண்டு வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள திரள்கின்றனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மும்பையைச் சேர்ந்த மருத்துவர் துஷார் ஷா ட்விட்டரில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கையில் பதாகையை ஏந்தி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அந்த பதாகையில் , “ கொரோனா தடுப்பூசி மையங்களில் உள்ள சுகாதாரப்பணியாளர்கள் உங்களுக்கு தடுப்பூசியை வழங்குகிறார்கள். அந்த மையங்களில் குவியும் மக்கள் வைரஸை தருகிறார்கள். கொரோனா தடுப்பூசி மையங்களில் இருந்து தடுப்பூசியை மட்டுமே பெற்றுச்செல்லுங்கள். வைரஸை அல்ல. இதனை எப்படி செய்வது.? இரண்டு மாஸ்க்-களை அணிந்துச்செல்லுங்கள். எப்போதும் மாஸ்க் உடனே இருங்கள். கையுறை அணிந்து செல்லுங்கள் இதன்மூலம் முகத்தை தொடுதல், கைக் கொடுப்பதை தவிர்க்கலாம். சானிடைசரை கொண்டு கைகளை கழுவுங்கள். யாருடனும் பேசாதீர்கள்” என அந்த வீடியோவில் கூறுகிறார்.
மேலும், வீட்டில் இருந்து செல்லும்போதே டீ, காபி குடிக்க வேண்டும் என்றால் குடித்துவிட்டு செல்லுங்கள். கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு சென்று அங்கு சாப்பிடுவதை தவிருங்கள். வரிசையில் நிற்கும் போதோ அல்லது தடுப்பூசி மையங்களிலோ உணவு, தண்ணீரை கூட அருந்தாதீர்கள். எக்காரணம் கொண்டும் உங்கள் முகக்கவசத்தை கழற்ற வேண்டாம்” என அறிவுறுத்திகிறார்.