எந்த சூழலிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மாட்டோம் - ஸ்டாலின் உறுதி!
திமுக ஆட்சி அமைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி கேட்டு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெல்லைட் ஆலையில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து, தற்காலிகமாக நான்கு மாதங்களுக்கு மட்டும் இயக்கி கொள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை தலைமைசெயலகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவைபோக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம். ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பகுதியில், நேரடி தொடர்புடைய தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதி சீட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள்.
தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்யும். எக்காரணத்தைக் கொண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகைத் தவிர வேறு எந்த அலகையும் செயல்பட அனுமதிக்கப்படாது உள்ளிட்ட 5 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில், "ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், திமுகவின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுகவின் மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இருவரும் பங்கேற்று, திமுகவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.
மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவு தற்காலிகமானதுதான். திமுக ஆட்சி அமைந்த பிறகும் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!" எனப் பதிவிட்டுள்ளார்.