இந்தியாவின் மூவர்ணக் கொடியை அலங்கரித்த புர்ஜ் கலிபா!
ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2812 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒருலட்சத்து 95 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 832 பேரும், டெல்லியில் 350 பேரும் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 19 ஆயிரம் பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 14 கோடியே 19 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டு வர பல்வேறு உலக நாடுகள் பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளன. இதேபோல், உதவி செய்யவும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் முன்வந்துள்ளன. இதற்கிடையே, துபாயின் அடையாளமாகவும் உலகின் மிக உயரமான கட்டிடமாகவும் புர்ஜ் கலிபா கட்டிடத்தில், இந்தியாவின் மூவர்ணக் கொடியை விளக்குகள் மூலம் வெளிப்படுத்தி stay strong India என்ற காட்சி வெளியிடப்பட்டது வரவேற்பை பெற்று வருகிறது. கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது.