காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது தற்போது உறுதியாகியுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இலங்கையிலும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்தசில வாரங்களாக அதிகரித்து வருகிறது. அங்கு 99,691பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
638 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாகஇலங்கையின் ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் துறை தலைவர் நீலிகா மாலவிஜே கூறும்போது, “இலங்கையில் வீரியமிக்க புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களைவிட அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாக இந்த புதிய வைரஸ் விளங்குகிறது. காற்றில் சுமார் 1 மணி நேரம் வரை இது உயிருடன் இருக்கும்” என்றார்.
இலங்கை சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் அசிலா குணவர்தன கூறும்போது, “கொரோனா முதல் அலையின்போது அறிகுறிகள் குறைவாக இருந்தன. இப்போது கொரோனா பாதித்தவர்களில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் செலுத்த வேண்டியிருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் போதுமான அளவில் உள்ளன” என்றார்.
கடந்த வாரம் புத்தாண்டு கொண்டாடப்பட்டதையடுத்து அங்கு வேகமாக பரவி வருவதாக தெரிகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த 2, 3 வாரங்களில்3-வது அலையாக மாறவும் வாய்ப்பு இருப்பதாக பொது சுகாதார ஆய்வாளர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அங்கு பல வழிகாட்டு நெறிமுறைகள் கோவிட் கட்டுப்பாடுகள் மே 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.