5 வது வெற்றியை தட்டிச்செல்வது யார்…?
விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது முதல் 4 ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்தது. முந்தைய லீக் ஆட்டத்தில் அந்த அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் பணிந்தது.
இந்த சீசனில் பெங்களூரு அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 192 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 122 ரன்களுக்குள் முடங்கியது.
அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 34 ரன்னும், மேக்ஸ்வெல் 22 ரன்னும் எடுத்தனர். விராட்கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இதுவரை 15 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் கடைசி ஓவரில் 5 சிக்சர் உள்பட 37 ரன்களை வாரி வழங்கியது அந்த அணியின் உத்வேகத்தை உருக்குலைப்பது போல் அமைந்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் வீழ்ந்தது. அதன் பிறகு நடந்த ஆட்டங்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சையும், சூப்பர் ஓவரில் ஐதராபாத் சன்ரைசர்சையும் அடுத்தடுத்து பதம் பார்த்து கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
தலா 4 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ள பெங்களூரு, டெல்லி அணிகள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளனர்.
5-வது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.