மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
பெண்கள் மாதவிடாய் காலத்தில் கூட கொரோனா தடுப்பூசிகளை எடுத்து கொள்ளலாமா, கூடாதா என்பதுகுறித்து அரசு விளக்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து உச்சமடைந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால், பொதுமக்களிடையே பீதியை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், மத்திய நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால், தேவையில்லாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார். கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், அவர்கள் வீட்டில் மற்ற உறுப்பினர்களுடன் ஒன்றாக அமர்ந்திருக்கும் சூழலில் மற்றவர்களும் கூட முக கவசம் அணிவது அவசியம் என்றும் கூறினார். இதேபோன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனி அறையில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவசரகால சூழலில், கொரோனா தடுப்பூசிகளை போடும் வேகம் சரிந்து விட நாம் விட்டுவிட கூடாது என்றும், உண்மையில், தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலத்தில் கொரோனா தடுப்பூசிகளை எடுத்து கொள்வது குறித்து விளக்கம் அளித்த அவர், மாதவிடாய் காலத்திலும் கூட கொரோனா தடுப்பூசிகளை எடுத்து கொள்ளலாம் என தெரிவித்தார். தடுப்பூசி போடுவது தள்ளிப்போடப்பட கூடாது என கூறிய அவர், தொலைதூர மருத்துவ சேவைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களை அவர் கேட்டு கொண்டார்.