ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கிடைக்குமா…? – இன்று முக்கிய உத்தரவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இதுநாள் வரை விசாரித்தது. கடந்த விசாரணையின்போது, ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் சூழலில், சட்டம்-ஒழுங்கு சூழலை காரணம் காட்டி ஆக்சிஜன் தயாரிக்க முடியாது என மாநில அரசு கூறியது.
இதனிடையே நேற்று, சென்னை தலைமைசெயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. இங்கு, உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவைபோக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம். ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பகுதியில், நேரடி தொடர்புடைய தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதி சீட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்யும். எக்காரணத்தைக் கொண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகைத் தவிர வேறு எந்த அலகையும் செயல்பட அனுமதிக்கப்படாது உள்ளிட்ட 5 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. நீதிபதியின் உத்தரவை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுமா? செய்யப்படாதா? என்பது தெரியவரும்