கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்

சுட்டெரித்துவிடுவது போன்ற வெயில் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமின்றி, சருமத்தின் அழகுக்கும் ஊறு விளைவிக்கிறது. கோடையில் உடல் நலத்தை காப்பதற்காக பல்வேறு இயற்கை பானங்களை அருந்துகிறோம்; இயற்கை வழிகளை பின்பற்றுகிறோம். நம்முடைய உடலின் தோலை பாதுகாக்கவும் நாம் முயற்சிகள் எடுக்கவேண்டும். தோலிலும் பெரிதான பாதிப்பை கோடைக்காலம் உருவாக்கிவிடக்கூடும்.

சீரக சர்பத்

வழக்கமாக விழாக்கள் மற்றும் உணவகங்களில் நாம் சாப்பிட்டு முடித்தவுடன் வாயில் போட்டுக்கொள்வதற்கு பெருஞ்சீரகம் கொடுப்பார்கள். அது ஜீரணத்திற்கு உதவி செய்யும். பெருஞ்சீரகம், சர்க்கரை மற்றும் நீரை சேர்த்து தயாரிக்கும் பானம் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். வாயிலிருந்து துர்நாற்றம் வீசுவதை குறைப்பதோடு, வாயை ஆரோக்கியமாகவும் இது காக்கும். வயிற்றில் உபாதை எழும்பாலும் இது தடுக்கும்.

வெட்டிவேர் சர்பத்

கோடைக்காலத்தில் வீட்டை குளிர்ச்சியாக்குவதற்கு வெட்டிவேரை பயன்படுத்துகிறோம். ஜன்னல்களில் வெட்டிவேரை திரை போன்று தொங்கவிடுவர். வெட்டிவேரை காற்றுக்கும் குளிர்ச்சியை அளிக்கும்.

வெட்டிவேரை நீரில் ஊற வைக்கவேண்டும். மூன்று மணி நேரம் ஊறிய பிறகு அந்த நீரை பருகலாம். இது மணமாக இருப்பதுடன் வயிற்றுக்கும் இதத்தை அளிக்கும். இப்படி மூன்று நாள்களுக்கு வேரை பயன்படுத்தி, பின்னர் வெயிலில் உலர வைத்து மீண்டும் மூன்று நாள்களுக்கு உபயோகிக்கலாம்.

ஊற வைத்து உலர்ந்த பின்னர் அந்த வெட்டிவேரைக்கொண்டு உடலை தேய்த்துக் குளிக்கலாம்.

சந்தன குளியல்

குளிக்கும்போது உடல் குளிரும்படியாக ஒரு வழியை பின்பற்றலாம். அரை வாளி நீரில் சிறிது சந்தனத்தை கரைக்கவேண்டும். சந்தன பேஸ்ட் அல்லது கட்டி எதையும் பயன்படுத்தலாம். குளித்து முடித்த பிறகு இறுதியாக இந்த அரை வாளி நீரை உடலில் ஊற்றவும். இது உடலுக்குக் குளிர்ச்சியை தரும். உடலிலுள்ள வெடிப்புகள், வேனிற்கட்டிகளை இது ஆற்றும். மனதுக்கும் இதத்தை அளிக்கும்.

பொதுவாக, கோடைக்காலத்தில் வயிற்றில் அமிலத்தால் அழற்சி ஏற்படுவதுண்டு. சீரக சர்பத், வெட்டிவேர் சர்பத் ஆகியவை வயிற்றுக்கு இதமளிக்கும். சந்தன குளியல் உடலுக்கு இதமளிக்கும். இதன் காரணமாக உடல் தோலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.

More News >>