ஒரே ஆம்புலன்ஸில் 22 சடலங்கள்.. இது மகாராஷ்ட்ரா அவலம்!
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முக்கியமானவை, மகராஷ்ட்டிரா, டெல்லி. இங்கு கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. அதேபோல் இறப்பும். இந்த இரண்டு மாநிலங்களிலும், கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2000 மேல். இதன்காரணமாக இந்த மாநிலங்களில் பூங்காக்கள் மயானமாக மாற்றப்பட்டு உடல்கள் எரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு கொரோனாவின் கோர முகத்தை எடுத்துக்காட்டும் விதமாக, ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்ட்டிராவின் பீட் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா காரணமாக 22 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரின் சடலத்தையும் ஒரே ஆம்புலன்சில் மயானத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்த பலரையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
இறந்தவர்களின் சடலத்தை ஒரே ஆம்புலன்சில் கொண்டு செல்லும் தகவ அறிந்த இறந்தவர்களின் உறவினர்கள் புகார் அளித்ததை அடுத்து பீட் மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளது. முன்னதாக இந்த அவலத்தை புகைப்படம், வீடியோ எடுத்தவர்களை காவல் துறையினர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பலரது செல்போன்கள் கைப்பற்றப்பட்டு பின்பு உரியவர்களிடம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.