`பேட் கம்மின்ஸ் இன்ஸ்பிரேஷன்... 40 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரட் லீ!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தலைவிரித்து ஆடுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல உயிர்கள் பறிபோயுள்ளன. உலக நாடுகள் `இந்தியாவுக்கு நாங்கள் உதவ தயார் என்று கைகொடுக்க முன்வந்துள்ளன. இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், ஆக்சிஜன் வாங்கி சப்ளை செய்வதற்காக, அவரால் முடிந்த அளவிற்கு 50 ஆயிரம் அமெரிக்கா டாலர் (இந்திய பண மதிப்பில் ரூ. 37,36,590.00) பிரதமர் கேர்ஸ் நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
மேலும், ஐபிஎல் போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களையும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவுடனான எனது அன்பு, கடந்த சில ஆண்டுகளாக இணக்கம் அடைந்து வருகிறது. இங்கிருக்கும் மக்கள் அன்புடன் பழகக் கூடியவர்கள். தற்போதைய நிலையில் இந்தியாவில் பெரும்பாலானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்து சொல்ல மாளாத துயரத்திற்கு நான் ஆளாகி உள்ளேன்.
இந்தியாவில் இருக்கும் சூழ்நிலையை மனதில் கொண்டு என்னால் முடிந்த பங்களிப்பை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளேன். இந்த நிதியை இந்திய மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை வாங்கிக் கொள்ளுங்கள். என்னுடன் ஐபிஎல் தொடரில் விளையாடும் சக வீரர்கள் மற்றும் இந்தியாவின் மனபான்மையை கண்டறிந்த உலக மக்களும் தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். என்னால் முடிந்தது 50000 அமெரிக்க டாலர். (இந்திய மதிப்பில் 37,36,590 ரூபாய்). இது ஒரு தொடக்கம் தான். எனது பங்களிப்பு பெரிய திட்டங்களை செயல்படுத்த எந்த அளவிற்கு உதவும் எனத் தெரியவில்லை. இருந்தாலும் சிலரது வாழ்வில் ஒரு சின்ன மாற்றமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்து இருந்தார்.
கம்மின்ஸின் செயல் ரசிகர்கள் மனதை கவர, அவரை கொண்டாடினர். இதற்கிடையே கம்மின்ஸை போன்று தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரட் லீ இந்தியாவுக்கு 41 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார். ஆனால் பிரட் லீ, பிட்காயின் மூலம் நிவாரணம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ``இந்தியா எப்போதுமே எனக்கு இரண்டாவது வீடு போன்றது. எனது தொழில் வாழ்க்கையிலும், ஓய்வு பெற்ற பின்னரும் கூட இந்த நாட்டு மக்களிடமிருந்து எனக்கு கிடைத்த அன்பும் பாசமும் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.
தொடர்ச்சியான தொற்றுநோயால் மக்கள் பாதிக்கப்படுவதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதற்கு நான் பாக்கியம் அடைகிறேன், அதை மனதில் கொண்டு, நிவாரணத்திற்கு கிரிப்டோ கரன்சியான 1 பி.டி.சி (பிட்காயின்) நன்கொடை அளிக்க விரும்புகிறேன். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் பொருட்களை இதை வைத்து வாங்குங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நிலவரப்படி ஒரு பிட்காயின் ரூ .40 லட்சத்துக்கு மேல் மதிப்பு உள்ளது. ஆனால் இந்தியாவில் பிட்காயின் சட்டப்பூர்வ அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.