கண்ணீரைத் தவிர வேறு எதுவும் இல்லை.. தாமிரா மரணத்தால் கலங்கும் மகேந்திரன்!

திருநெல்வேலியை சேர்ந்தவர் தாமிரா என்ற காதர் முகைதீன். மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் தாமிரா. 2010ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 'ரெட்டைச் சுழி' என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.முதல் படத்திலேயே பாரதிராஜா, பாலச்சந்தர் என்ற தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச இயக்குநர்களை சேர்த்து நடிக்க வைத்து கவனம் ஈர்த்தார். இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 27) காலை, சிகிச்சை பலனின்றி தாமிரா உயிரிழந்தார். இந்தச் செய்தியை அவரது செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சி.மகேந்திரன் தாமிரா மரணம் தொடர்பாக, இரங்கல் தெரிவித்த்துள்ளார். அதில், ``ஒரு மாதம் மட்டுமே கழிந்திருக்கிறது. என்னை சந்திக்க வேண்டும் என்று நீ விரும்பியதாக புகழ் மூலம் தகவல் வந்தது. ஏதோ ஒரு அவசரம் என்று நினைத்து உன்னை சந்திப்பதற்காக அந்த விடுதிக்கு நான் வந்தேன். புன்னகை ஒன்றை மெல்ல உதிர்த்துவிட்டு, வேறு ஒன்றுமில்லை உங்களை சந்தித்துப் பேச விரும்பினேன். அவ்வளவுதான் என்றாய். இறப்பதற்கு முன் என்னை சந்திக்க வேண்டுமென்று விரும்பினாயா ப்ரியா தோழனே. இதன் மூலம்,ஏன் தந்தாய் இந்த சித்திரவதையை எனக்கு.

தாமிரா இன்று தமிழகம் அறிந்த இயக்குனர். முதன் முதலில் எனது தோழர் கவிதா பாரதியின் அறையில் தான் அவரை சந்தித்தேன். அன்பு, அரசு, ஸ்ரீதர் ராஜ் உள்ளிட்ட தோழர்கள் திருவண்ணாமலையில் இருந்து எங்களை சந்திப்பதற்காகவே வந்து செல்வார்கள். ஒருபுறம் பசியோடும் மறுபுறம் இலட்சியக் கனவுகளோடும் வாழ்ந்த காலம். அந்த சூழலில், முளைவிட்டு வளர்ந்த தோழமை உறவு அது. அடிக்கடி சந்திக்க விட்டாலும் அது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருந்தது.

இன்று திடீரென்று ஒரு எண்ணம்.மாமரத்து இலைகள் தலை வருடி செல்லும் கவிதா பாரதியின் மொட்டைமாடியில், நமது தோழர்கள் சகிதம், உனது அதே புன்னகையுடன் உன்னை பார்க்க விரும்புகின்றேன். காலம் மாமரத்தையும்,மொட்டைமாடியையும் கொன்று விட்டதைப் போல உன்னையும் கொன்று விட்டது. நீ திரும்பி வரமாட்டாய். இப்பொழுது உன்னிடம் பகிர்ந்து கொள்வதற்கு என்னிடம் கண்ணீரைத் தவிர வேறு எதுவும் இல்லை தாமிரா" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

More News >>