ஜகமே தந்திரம் ரீலீஸ் தேதி அறிவிப்பு..!
கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது.தீபாவளியையொட்டி 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் தியேட்டரில் படங்கள் வெளியிட அனுமதிக்கப்பட்டது. இதனால் விஜய் நடித்த மாஸ்டர், தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் போன்ற படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் தள்ளிவைக்கப்பட்டது. பொங்கலையொட்டி 100 சதவீதம் டிக்கெட் அனுமதி அளிக்கப்பட்டது. கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் மீண்டும் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மாஸ்டர் படம் வெளியாகி 250 கோடி வசூல் சாதனை படைத்தது. ஆனாலும் ஜகமே தந்திரம் வெளியாகவில்லை.
ஜகமே தந்திரம் தியேட்டரில் வருமா? ஒடிடியில் வருமா என்று குழப்பத்திலிருந்த நிலையில் ஒடிடி தளம் நெட்பிளிக்ஸில் வெளியாவது உறுதிபடுத்தப்பட்டது. தமிழில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமான ஜகமே தந்திரம் படத்தை நெட் பிளிக்ஸ் நிறுவனம் தங்களது தளத்தில் பிரத்தியேகமாக வெளியிடுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. ஜகமே தந்திரம் படம், சுருளி எனும் கேங்க் ஸ்டர் தனது வாழ்வில் தனது இருப்பிடத்தை அடைய நன்மைக்கும் தீமைக்குமான போரில் எதை தேர்ந்தெடுக்கிறான் என்பதைச் சொல்லும் படமாகும்.
இந்த நிலையில்,வரும் ஜுன் 18 ஆம் தேதி படம் வெளியாகிறது என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பால், தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இத்திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஜகமே தந்திரம் 2021ல் வெளியாகும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடிய முதல் திரைப்படம் ஆகும். இப்படம் ஒரே நேரத்தில் பல மொழிகளில் 190 நாடுகளில் 204 மில்லியன் சந்தாதாரர்களைச் சென்றடைய உள்ளது.