தடுப்பூசி போட வந்த இடத்தில் கொரோனா வை மறந்த மக்கள்…!

மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி மையத்தில் சமூக இடைவெளி இன்றி ஒரே இடத்தில் பொதுமக்கள் திரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, நேற்று 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,73,13,163 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2812 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,95,123 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டன. இதில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்காளத்தின் பீர்பம் நகரில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்திற்கு சென்ற பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியை மறந்து அதிக அளவில் ஒரே இடத்தில் திரண்டனர். இதனால் தொற்று பரவல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

சில தினங்களுக்கு முன் மருத்துவர் ஒருவர், கொரோனா தடுப்பூசி செலுத்த செல்பவர்கள் சமூக இடைவேளியை பின்பற்ற வேண்டும், மேலும், தடுப்பூசி மையத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>