இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் பணக்காரர்கள்
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் இரண்டாயிரத்தை கடந்து செல்கிறது. இதனிடையே கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காமல் மாண்டுபோகின்றனர்.
மயனாங்களில் ஒரு மணித்துளி இடைவேளை இன்றி நூற்றுக்கணக்கான சடலங்களை எரிக்க, புதைக்க இடம் இன்றி உறவினர்கள் தவித்து வருகின்றனர். மயானங்களில் எரிக்க டோக்கன் வாங்கி பல நாட்கள் சடலங்களுடன் உறவினர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் வாழும் பணக்கார குடும்பங்கள் சில வெளிநாடுகளுக்கு தனி விமானத்தில் பறந்து சென்றுள்ளனர்.
நாட்டில் கொரோனா பரவல் மக்களை பீதியடையச் செய்துள்ளது, மத்திய, மாநில அரசுகள் பரவலையும் மரணங்களையும் தடுக்க தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
கனடா, தற்போது ஆஸ்திரேலியா, ஹாங்காங், யுஏஇ, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து பயணங்கள் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு தடை விதித்துள்ளது. இதனையடுத்து மாலத்தீவுகளுக்கு படையெடுத்தனர். இதனையடுத்து அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதுடெல்லியிலிருந்து துபாய்க்குச் செல்ல விமான டிக்கெட்டுகளின் விலை உயர்ந்தப்பட்டுள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 10 மடங்கு அதிகமாக இகானமி கிளாஸ் டிக்கெட் கட்டணம் துபாய்க்கு 1,300 டாலர்களாக உள்ளது.
எப்படியாவது இந்தியாவில் இருந்து தப்பிவிட வேண்டும் என பணக்காரர்கள் துடிப்பதாக, புதுடெல்லியைச் சேர்ந்த “கிளப் ஒன் ஏர்” என்ற தனியார் ஜெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ராஜன் மெஹ்ரா தெரிவித்துள்ளார். யாருக்கெல்லாம் தனியார் ஜெட் எடுத்துக் கொள்ள வசதி இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் தனியார் ஜெட்களில் பறக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.