மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
இங்கிலாந்தில் 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் வீரியம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல்வேறு உலக நாடுகளும் கொரோனாவை அழித்து ஒழிக்க போராடி வருகின்றனர்.
இந்நிலையில்,இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான பிரிட் இசை விருது விழா, வருகிற மே 11-ந் தேதி நடைபெற உள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ஓ2 அரேனாவில் நடத்தப்பட உள்ளது. இதில் 4,000 பேர் கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியொரு முடிவுக்கு என்ன காரணம் என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொரோனாவுக்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த விருது விழா நடைபெற உள்ளதாம். மேலும் இதில் கலந்து கொள்ள உள்ள 4,000 பேரில் 2,500 பேர் முன்களப் பணியாளர்கள் மற்றும் 1,500 பேர் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்களாவர்.
மாஸ்க் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையில்லை என்பதால் நிகழ்ச்சிக்கு முன்னதாக 4000 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை என்று வந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுமாம். ஏதெனும் தொற்றுக்கான அறிகுறி உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக நிகழ்ச்சிக்கு பின் சோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.