கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுமதி.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 2-ம் தேதி எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
அதில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழையும் கட்சி முகவர்கள், வேட்பாளர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து அதில் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் அல்லது கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்தியிருக்க வேண்டும் அதற்கான சான்றிதழ் கட்டாயம். கொரோனா பரிசோதனை செய்யாத அல்லது தடுப்பூசி 2 டோஸ் போட்டுக்கொள்ளாத கட்சி முகவர்கள், வேட்பாளர்களுக்கு வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதியில்லை.
இந்த சான்றிதழ் வாக்கு எண்ணிக்கை நாளுக்கு 48 மணிநேரத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது மாவட்ட தேர்தல் அதிகாரியின் பொறுப்பு. வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே பொதுமக்கள் கூட அனுமதியில்லை. வாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா தடுப்பு விதிகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.