தடுப்பூசியின் விலையை குறைத்து அதிரடி... சீரம் நிறுவனம் அறிவிப்பு!
இந்தியாவில் முழுவதும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸை 250 ரூபாய் என்ற விலைக்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விற்பனை செய்து வந்தது. இந்நிலையில், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் இன்ஸ்டிடியூட் உயர்த்தியுள்ளது. இனி கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு ரூ.400-க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.
மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கும் கொரோனா தடுப்பூசி டோஸ் விலையை உயர்த்தியுள்ளபோதும் மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை முந்தைய விலையான 250 ரூபாய்க்கே தொடர்ந்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தனித்தனியே விலையை நிர்ணயித்துள்ள சீரம் நிறுவனம், இந்த விலை அமெரிக்கா, ரஷியா, சீனாவில் விற்பனையாகும் கொரோனா தடுப்பூசிகளின் விலையை ஒப்பிடும்போது குறைவுதான் என கூறுகிறது. ஆனால், இந்த விலை உயர்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. விலை அதிகம் என பல்வேறு மாநிலங்களும் கோரிக்கை விடுக்கத் தொடங்கின. இதையடுத்து தற்போது சீரம் நிறுவனம் மாநிலங்களுக்கு வழங்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளது. அதன்படி, இனி ரூ.300-க்கு தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவன அதிபர், ஆதார் பூனவல்லா, தனது டுவிட்டர் பக்கத்தில், ``உடனடியாக இந்த விலைகுறைப்பு நடைமுறைக்கு வரும். இந்த விலைகுறைப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான கோடி நிதி மாநில அரசுகளுக்கு மிச்சமாகும். இது எண்ணற்ற உயிர்களை காப்பாற்றும்" என்று கூறியிருக்கிறார்.