850 ரூபாயும் பிரபஞ்சத்தை விடப் பெரிய மனிதநேயமும்.. கேரள ஹீரோ ஜனார்தனன்!
கொரோனாவுக்கு எதிரான போரில் பல்வேறு நபர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில், கேரளாவை சேர்ந்த நபர், செய்த உதவி தற்போது பல்வேறு மனிதர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
இவரின் பெயர் ஜனார்தனன். வயது 53. கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்திலிருக்கும் ஆவெரா என்கிற இடத்தில் பீடி சுற்றிப் பிழைக்கும் இவர் இரு செவிகளிகும் கேட்கும் திறனற்றவர். மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர். சமீபத்தில் வங்கிக்குச் சென்ற ஜனார்த்தனன் தன் கணக்கில் இருந்த 2லட்சம் ரூபாய்களை முதலமைச்சர் சேகரிக்கும் கோவிட் நிவாரண நிதிக்கு மாற்றச் சொன்னார்.
இந்தப் பணம் அவர் வாழ்நாள் சேமிப்பு. தினேஷ் பீடிக் கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்ற போது கிடைத்த வருங்கால வைப்பு நிதி, பீடித் தொழிலாளியான மனைவி ஓய்வு பெற்ற போது கிடைத்த பணிக் கொடை, மாதந்தோறும் மாநில அரசு வழங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான பென்ஷன் ஆகியவற்றின் கூட்டுத் தொகை. திகைத்துப் போன வங்கி ஊழியர்கள் உன் சேமிப்பு இல்லாமல் எப்படி வாழப் போகிறாய் என்று கேட்டனர். கொரொனாவினால் இறக்கும் என் சகோதர சகோதரிகளின் உயிர்களை விட அது மேலானதில்லை என்றும் நான் பீடி சுற்றிப் பிழைத்துக் கொள்வேன் என்றும் கூறி விட்டார்.இப்போது அவரது கணக்கில் இருப்பது 850 ரூபாயும் பிரபஞ்சத்தை விடப் பெரிய மனிதநேயமும் தான்!