தன் நாட்டு மருத்துவர்களை முதன் முறை அவமானப்படுத்தியது மோடி தான்!
தனது நாட்டு மருத்துவர்களை, ஒரு பிரதமர் வெளிநாட்டில் வைத்து அவமானப்படுத்தியது உலகத்திலேயே இதுதான் முதல்முறை என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் லண்டனுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வெஸ்ட் மினிஸ்டரில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது, இந்திய மருத்துவர்கள், தனியார் மருந்துக் கம்பெனிகளின் உதவியுடன் வெளிநாட்டு கருத்தரங்குகளில் கலந்து கொள்வதாகவும், மருந்து கம்பெனிகளை விளம்பரப்படுத்தவே இவ்வாறு அவர்கள் செய்வதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு இந்திய மருத்துவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்பு இந்திய மருத்துவ சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்து மோடிக்கு கடிதம் எழுதியிருந்தது. தற்போது, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் சங்கம் ஒரு கண்டனக் கடிதத்தை மோடிக்கு எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் “மருந்து உற்பத்தியாளர்களின் செலவிலேயே மருத்துவர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறுவது கண்டனத்திற்கு உரியது. மருத்துவச் சுற்றுலாவை கொச்சைப்படுத்துவது போல பிரதமரின் பேச்சு உள்ளது” என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், “தனது நாட்டு மருத்துவர்களை, ஒரு பிரதமர் வெளிநாட்டில் வைத்து அவமானப்படுத்தியது உலகத்திலேயே இதுதான் முதல்முறை. பிரதமர் மோடி, ஒருநாள் முழுவதும் வெள்ளைக் கோட்டு அணிந்து, மருத்துவர் பணியைச் செய்துபார்த்தால்தான் கஷ்டம் தெரியும்” என்றும் சாடியுள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com