ஆக்சிஜன் கேட்டவர் மீது வழக்குப்பதிவு - சர்ச்சையில் உத்தரபிரதேச அரசு

தனது தாத்தாவுக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது உத்தரபிரதேச காவல்துறை. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்திலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று கூறும் தனியார் மருத்துவமனையின் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கைவிடுத்தார். இதற்கிடையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷாசங் யாதவ் என்பவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் விரைவாக ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்படுகிறது என்று ட்விட்டரில் நடிகர் சோனு சூட்டைடேக் செய்து பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சரும் அமேதி தொகுதி எம்.பியுமான ஸ்மிருதி இராணிக்கு டேக் செய்யப்பட்டது. அந்த ட்விட் பதிலளித்த ஸ்மிருதி இராணி, நீங்கள் ஷேர் செய்த ஷாசங்கின் எண்ணுக்கு மூன்று முறை போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை. அமேதி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் மற்றும் அமேதி காவல்துறையிடம் இதுகுறித்து விசாரிக்க கூறியிருக்கிறேன் என்று பதிலளித்தார். அதனையடுத்து, ஸ்மிருதி இராணியின் ட்விட்டுக்கு பதிலளித்த செய்தியாளர் ஷெர்வானி, ஷாசங்கின் தாத்தா உயிரிழந்துவிட்டார் என்று ட்வீட் செய்யப்பட்டது.

அதனையடுத்து, ஷெர்வானியின் ட்வீட்டுக்கு பதிலளித்த மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அருண் குமார், உயிரிழந்த ஷாசங்கின் தாத்தாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அவர், துர்காபூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார் என்று பதிவிட்டுள்ளார்.

அதனையடுத்து, உத்தரப் பிரதேச மாநில காவல்துறையினர் ஷாசங்கின் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் அரசு ஊழியரின் உத்தரவை மீறுதலுக்கான பிரிவு 188, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோய்களைப் பரப்பும் வகையில் அஜாக்ரதையாக இருத்தலுக்கான பிரிவு 269, பொதுமக்கள் மத்தியில் உள்நோக்கத்துடன் அச்சத்தை ஏற்படுத்துதல் பிரிவுக்கான 505 ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஷாசங்கின் மீது தொற்றுநோய் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷாஸ்சங்கும் அவருடைய ட்விட்டர் பதிவில் கொரோனா பாதிப்பு என்று குறிப்பிடவில்லை. அதனை ரீட்விட் செய்த யாரும் கொரோனா பாதிப்பு என்று குறிப்பிடவில்லை. இந்தநிலையில், அவசர தேவையின் நிமித்தம் ஆக்ஸிஜன் தேவை என்று ட்வீட் செய்தவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

More News >>