இரத்த தானத்துக்கு உகந்த தருணம்.. தடுப்பூசி போட போகும் இளைஞர்களே இதை கவனியுங்கள்!
கொரோனா இரண்டாம் அலை அதிகரிக்க தொடங்கியதால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. முதல்நாளே பல லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி போட விருப்பம் தெரிவித்து முன்பதிவு செய்தனர். இதனால் முதல் நாளே இணையம் முடங்கும் அளவுக்கு போனது.
இதற்கிடையே, தடுப்பூசி போடவிருக்கும் அனைவருக்கும் வேண்டுகோள் ஒன்றை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் விடுத்துள்ளது. அதில், ``வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல் 18வயதுக்கு மேல் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட உள்ளார்கள். தடுப்பூசிக்கு பிறகு 70 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது. இப்போது கோடிக்கணக்கான இளைஞர்கள் தடுப்பூசி போட இருப்பதால் "அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை" போன்றவைக்கு ரத்தம் கிடைக்காமல் போய்விடும். அதனால் நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னர் ரத்த தானம் செய்யுங்கள். ஒவ்வொரு சொட்டு குருதியும் முக்கியம்" என்று குறிப்பிட்டுள்ளது.