கொரோனா பரவல் எதிரொலி - 150 மாவட்டங்களில் ஊரடங்கு ?
பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத், அரியானா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரமாகவே தினசரி பாதிப்பு 3 லட்சத்துக்கு மேல் உள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அது பெரிய ஆபத்தாக முடியும். எனவே தொற்று பரவலை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது.
அங்கு கடந்த 2 வாரங்களை ஒப்பிடும்போது 15 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிப்பு உயர்ந்து உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று மத்திய சுகாதாரத்துறை, உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அப்போது தொற்று பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை கொண்டு வரலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.அதாவது 15 சதவீதத்துக்கும் மேல் பரவல் உள்ள 150 மாவட்டங்களிலும் சில தளர்வுகளை மட்டும் அறிவித்து விட்டு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று அதில் ஆலோசிக்கப்பட்டது.
எனவே அந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசிடம் சுகாரத்துறை சிபாரிசு செய்து உள்ளது.இது சம்பந்தமாக மத்திய சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, “தொற்று பரவல் மிக அதிகளவில் உள்ள மாவட்டங்களில் அதன் பரவல் சங்கிலி தொடரை துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. சில வாரங்களுக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே தான் குறிப்பிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறோம். மத்திய அரசு இதுபற்றி முடிவு எடுக்கும்” என்று கூறினார்.
மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோடு கலந்து ஆலோசித்து விட்டு முடிவு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.