சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
இந்தியா முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறிவருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
தமிழ்நாடு, கார்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் முழு மற்றும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலும், திரையரங்குகள், பெரிய கடைகள் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல, கர்நாடகாவிலும் 14 நாள்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 15 சதவீதத்துக்கும் கூடுதலாக உள்ள 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கொண்டுவருவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு கொண்டுவரும் பட்சத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு கடைகள் திறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு மூலம் கொரோனா பரவல் சங்கிலியை முறிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.