மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் : இறுதி கட்ட வாக்குப்பதிவு துவங்கியது
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 8வது கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.
294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 259 தொகுதிகளுக்கு ஏழு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 8 வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நான்கு மாவட்டங்களில் 35 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை மணி 6.30க்கு முடிவடைகிறது.
மொத்தமுள்ள 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 35 பெண்கள் உட்பட 283 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஷாஷி பாஞ்சா, நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் சதான் பாண்டே உள்ளிட்ட பிரமுகர்களும் அடங்குவர்.
இறுதிக்கட்ட தேர்தலில் 41 லட்சத்து 21 ஆயிரத்து 735 பெண் வாக்காளர்கள் உள்பட மொத்தம் 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் இன்று மாலை 6.30 மணியுடன் தேர்தல் முடிவடைந்த பிறகு இரவு 7 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதனால், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை காட்சி ஊடகங்கள் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதம் 2ஆம் தேதி மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.