பிக் பாஸ் ஓவியாவிற்கு இன்று பிறந்தநாள்.. சோசியல் மீடியாவில் வாழ்த்தும் ரசிகர்கள்..
நடிகர் ஓவியா தனது 30வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். மலையாளத்தில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவிட்டு 2010ல் களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார் ஓவியா. விமல் நடித்திருந்த அந்த படம் அவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆக்கியது. அழகான தோற்றம் மற்றும் கியூட்டான எக்ஸ்பிரஷன்கள் கோலிவுட் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
அதன் பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக மெரினா, விமல் ஜோடியாக கலகலப்பு ஆகிய படங்களில் நடித்தார். கலகலப்பு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சீரியஸான படங்களை விட கொஞ்சம் காமெடி கலந்த கதாபாத்திரங்களில் அதிகம் நடித்தார் அவர். அதன்பிறகு தனியார் தொலைக்காட்சியில் புதிதாக துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற சில நாட்களிலேயே அவரது கேரக்டரை பார்த்து அதிகம் வியந்த நெட்டிசன்கள் அவருக்கு ரசிகர்களாக மாறி ஓவியா ஆர்மி, ஓவியா நேவி என ரசிகர் மன்றங்களை துவங்கினர். ஐந்து வருடமாக சினிமா பெற்றுத்தராத ரசிகர்களை பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெற்றுத்தந்தது. இத்தனை ரசிகர் ஆதரவு இருந்தும் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்நிலையில் இன்று ஓவியாவின் 30வது பிறந்தநாள். அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர். மேலும் ஓவியா ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என கேட்டுவருகின்றனர்.