உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு? – ஸ்டாலினின் புதிய கணக்கு!

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்க வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே 2ம் தேதிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அடுத்து யார் கையில் ஆட்சி என்ற கணிப்புகளும், எதிர்பார்ப்புகளும் வேகமெடுத்துள்ளன. திமுகவுக்குள் நாம் தான் ஆட்சி அமைக்கிறோம். அமைச்சர்கள் யார் யார் என்பதுதான் கேள்விஎன்கிறார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியில் இருந்து 21ஆம் தேதி வரைக்கும் குடும்பத்தோடு கொடைக்கானலில் இருந்தார். தேர்தல் நேர பயணத்துக்கான ஓய்வாக இந்த பயணம் கருதப்பட்டாலும், கொடைக்கானலில் இருந்தபோது அடுத்த கட்ட நகர்வுக்கான முக்கிய சில முடிவுகளை ஸ்டாலின் எடுத்திருக்கிறார். கொடைக்கானல் சென்ற ஸ்டாலின் அமைச்சர் பட்டியல் ஒன்றையும் தயாரிக்கும் பணியில் மும்முரம் காட்டியுள்ளார். வெள்ளை பேப்பரில் ஸ்டாலினே தன் கைப்பட அமைச்சர்களின் பெயர்களை எழுதி வைத்துள்ளார்.

2006 கலைஞர் அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களில் ஸ்டாலின் உள்ளிட்ட 17 பேர்தான் இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களில் யார் யார் மேல் வழக்கு உள்ளது என்பதையெல்லாம் ஆராய்ந்து ஒரு ஃப்ரஷ்ஷான கேபினட் பட்டியலை கொடைக்கானலில் தயாரித்திருக்கிறார் ஸ்டாலின். பல்வேறு யோசனைகளுக்கு பிறகு தான் இந்த அமைச்சரவை பட்டியல் தயாராகி இருக்கிறது. எனவே அதில் புதுமுகங்கள்தான் அதிகம் இடம்பெற வாய்ப்புள்ளது.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிப்பதா வேண்டாமா என்ற விவாதம் கொடைக்கானல் முதல் சென்னை வரை விவாதம் கிளம்பியுள்ளது

உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு அளிக்க வேண்டாம் என்று ஐபேக் ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்ததாக அப்போதே தகவல்கள் வெளியாயின. ஆனாலும், தற்போதைய தேர்தலை விட்டால் அடுத்து இன்னும் ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும்.

இப்போதே உதயநிதிக்கு 43 வயது ஆகிறது. அடுத்த தேர்தலில்தான் நிற்க வேண்டும் என்றால் அவருடைய சீனியாரிட்டி என்ன ஆவது? எனவே இப்போதே உதயநிதி தேர்தலில் நிற்க வேண்டும் என்று அவரது தரப்பினர் ஸ்டாலினை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தனர். இதே ரீதியான அழுத்தங்கள் உதயநிதி அமைச்சர் ஆவதற்கும் காரணங்களாக ஸ்டாலின் முன்னால் வைக்கப்பட்டிருக்கின்றன.

இதையடுத்து உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் கட்சிக்குள், குடும்பத்துக்குள் என்னென்ன ரியாக்‌ஷன்கள் ஏற்படும் என்பது பற்றியும் ஆலோசித்திருக்கிறார் ஸ்டாலின். இறுதியில் உதயநிதிக்கு உள்ளாட்சி அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

More News >>