இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்

இளம் வயது உடையவர்கள் தங்களுக்கு கொரோனா தாக்காது என்ற தைரியத்தில் சுற்றித்திரிந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையில் இளம் வயதினருக்கு இரண்டாம் முறையும் கொரோனா தாக்கும் என்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. கொரோனா வைரசை தடுக்கும் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. எனினும், ஒரு குறிப்பிட்ட காலம்தான் இந்த தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிரான செயல்திறனைக் கொண்டிருக்கின்றன.

அதன்பின்னர், மீண்டும் கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் அதன் பாதுகாப்பு அம்சம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்தவகையில், அமெரிக்காவின் இகான் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், இளம் வயதினருக்கு கொரோனா இரண்டாவது முறை தாக்கும் வாய்ப்பு அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையில் உள்ள 3000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர், 18 முதல் 20 வயது வரை உள்ள இளைஞர்கள். கடந்த கால கொரோனா நோய்த்தொற்று, இளைஞர்களை மறுபாதிப்பில் முழுமையாகப் பாதுகாக்காது என்று ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். இந்த ஆய்வு முடிவு லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய தொற்றுக்கு பிறகு உடலில் ஆன்டிபாடிகள் இருந்தபோதிலும், நோயெதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கவும், மீண்டும் தொற்று ஏற்படுபதை தடுக்கவும், தொற்று பரவுவதைக் குறைக்கவும் தடுப்பூசி இன்னும் அவசியம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இளைஞர்கள் முடிந்தவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.

More News >>